சியாம் பகுதியில் பல்வேறு அரசுகளில் இந்தியப் பண்பாடு பின்பற்றப்பட்டது. இந்திய அறிஞர்களின் உதவியுடன் தாய் வரிவடிவம் உருவாக்கப்பட்டது. தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் அந்நாட்டின் பழைய சட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. பாங்காக் நகரில் உள்ள கோயில்களில் ராமாயண, மகாபாரத கதைகளை பிரதிபலிக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
சுமத்ரா மற்றும் ஜாவா
இந்தியாவிற்கும் தூரக் கிழக்கு ஆசியாவிற்கும் ஒரு இணைப்புப் பாலமாக மலேயா தீபகற்பம் விளங்கியது. அங்கு கி.மி. ஐந்து முதல் பதினைந்தாம் நூற்றாண்டுவரை பல இந்து அரசுகள் ஆட்சி புரிந்தன. சுமத்ரா தீவில் இருந்த மிகச் சிறப்பான இந்து அரசு ஸ்ரீவிஜயம் என்பதாகும். ஏழாம் நூற்றாண்டில் அது ஒரு வாணிக, கலாச்சார மையமாகத் திகழ்ந்தது. பின்னர் ஸ்ரீவிஜயம் ஒரு கடல் சார் வாணிப சக்தியாக உருவெடுத்து சைலேந்திரப் பேரரசாக புகழ் எய்தியது. அருகிலிருந்த தீவுகளான ஜாவா பாலி, போர்னியோ மற்றும் கம்போடியா மீது அது ஆதிக்கம் செலுத்தியது. சைலேந்திர ஆட்சியாளர்கள் மகாயான புத்த சமயத்தவர்கள். தமிழ்நாட்டின் சோழர்களுடனும், வங்காளத்தின் பாலர்களுடனும் அவர்கள் நல்லுறவை மேற்கொண்டிருந்தனர். சைலேந்திர அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் அமைப்பதற்கு சோழ அரசன் ராஜராஜ சோழன் உதவிகளை வழங்கினார். ஆனால், அவரது மகன் ராஜேந்திர சோழன் சைலேந்திர அரசை சிறிது காலம் கைப்பற்றி வைத்திருந்தான். பின்னர் அவர்கள் விடுதலை பெற்றனர். கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டுவரை சைலேந்திர பேரரசு நீடித்திருந்தது.
கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே ஜாவா தீவில் ஒரு இந்து அரசு நிறுவப்பட்டது. மத்தியா ஜாவா பகுதியில் எழுச்சி பெற்ற மடாரம் என்ற அரசு இந்து சமய, கலாச்சார மையமாகத் திகழ்ந்தது. சைலேந்திரர்கள் பின்னர் அதனைக் கைப்பற்றினார். ஒன்பதாம் நூற்றாண்டுவரை ஜாவா சைலேந்திரப் பேரரசுடன் இணைந்திருந்தது. பின்னர் விடுதலையடைந்தது. சைலேந்திரர் ஆட்சியின் கீழ் ஜாவா கலைத்துறையில் புகழும் பொலிவும் பெற்று விளங்கியது.
![]() |
போரோபுதூர் சின்னம் |