பல்லவர்கள் தவிர தக்காணத்தில் ஆட்சிபுரிந்த மேலைச் சாளுக்கியரும், இராஷ்டிரகூடர்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இவ்விருவர்களுக்கும் தெற்கே இரண்டு அரசியல் போட்டியாளர்கள் இருந்தனர். அவர்கள் பல்லவர்களும், சோழர்களும் ஆவர். மேலும் அவர்களது பண்பாட்டுப் பங்களிப்பும் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதாகும்.
சாளுக்கியர்கள் (கி.பி. 543 - 755)
சுமார் இரண்டு நூற்றாண்டுகள் தக்காணத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தவர்கள் சாளுக்கியர்கள். பின்னர் இராஷ்டிரகூடர்களின் வலிமை பெருகியது. மேலைச் சாளுக்கியரின் வழிவந்தவர்கள் வெங்கியின் கீழைச் சாளுக்கியர்களும் கல்யாணிச் சாளுக்கியர்களும் ஆவார்கள். மேலைச்சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் முதலாம் புலிகேசி. வாதாபி அல்லது தற்காலத்திய பாதாமியை தலைநகராகக் கொண்டு அவர் ஒரு சிறிய அரசை தோற்றுவித்தார்.
இரண்டாம் புலிகேசி (கி.பி. 608 - 642)
சாளுக்கிய நாணயங்கள்
சாளுக்கிய மரபின் முக்கிய ஆட்சியாளர் இரண்டாம் புலிகேசி. ஜஹோலே கல்வெட்டு அவரது ஆட்சிக் காலத்தைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறது. பனவாசி கடம்பர்களையும், மைசூர் கங்கர்களையும் எதிர்த்துப் போரிட்டு தனது ஆதிக்கத்தை அவர் நிலைநிறுத்தினார். கங்க அரசர் துர்விநீதன் அவரது மேலாண்மையை ஏற்றுக்கொண்டு தனது மகளையும் இரண்டாம் புலிகேசிக்கு மணமுடித்துக் கொடுத்தார். நர்மதையாற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனரை முறியடித்தது இரண்டாம் புலிகேசியின் மற்றொரு மகத்தான சாதனையாகும். தென்னிந்தியாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஹர்ஷரின் எண்ணத்தை சிதைத்தவர் இரண்டாம் புலிகேசி. பல்லவர்களுக்கெதிரான தனது முதல் படையெடுப்பில் அவர் வெற்றிபெற்றார். ஆனால் காஞ்சிக்கருகில் முதலாம் நரசிம்மவர்மனிடம் படுதோல்வியைத் தழுவினார். பின்னர் சாளுக்கிய தலைநகரம் வாதாபி பல்லவர்களால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இரண்டாம் புலிகேசியின் ஆட்சிக் காலத்தில் சீனப்பயணி யுவான்கவாங் அவனது நாட்டிற்கும் வருகை புரிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் புலிகேசிக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் விக்ரமாதித்தன். அவர் சாளுக்கிய நாட்டை மீண்டும் நிலைப்படுத்தி பல்லவர்களை முறியடித்ததோடு காஞ்சியையும் கைப்பற்றினார். பல்லவர்களிடம் தனது தந்தை அடைந்த தோல்விக்கு விக்ரமாதித்தன் பழிதீர்த்துக் கொண்டார், சாளுக்கிய மரபின் கடைசி அரசர் இரண்டாம் கீர்த்திவர்மன். அவனை முறியடித்து இராஷ்டிரகூட அரசை நிறுவியவன் தந்தி துர்க்கன்.
சாளுக்கியரின்கீழ் ஆட்சி முறை, சமூக வாழ்க்கை
பல்லவர்கள், சோழர்கள் ஆட்சி முறைக்கு மாறாக சாளுக்கிய ஆட்சிமுறையில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டே இருந்தது. சாளுக்கியரின்கீழ் கிராம சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. சாளுக்கியர்கள் சிறந்த கடற்படையைக் கொண்டிருந்தனர். இரண்டாம் புலிகேசியின் கடற்படையில் நூறு கப்பல்கள் இருந்தன. மேலும் நிரந்தரமான சிறு படையையும் அவர்கள் வைத்திருந்தனர்.