புத்த சமயத்தை நிறுவிய கௌதமர் அல்லது சித்தார்த்தர் கபிலவஸ்துவுக்கு அருகிலுள்ள லும்பினி தோட்டத்தில் கி.மு. 567 ஆம் ஆண்டு பிறந்தார், சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர் அவரது தந்தை. மாயாதேவி அவரது தாய். சேயாக இருக்கும்போதே தாயை இழந்த சித்தார்த்தர் சிற்றன்னை பிரஜாபதி கௌதமி என்பவரால் வளர்க்கப்பட்டார். தனது பதினாறாவது வயதில் யசோதரையை மணந்து கொண்ட அவர் ராகுலன் என்ற மகனுக்கு தந்தையானார். வயோதிகர், நோயாளி, பிணம், துறவி ஆகியவற்றை கண்ணுற்ற அவர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். தமது இருபத்தி ஓன்பதாம் வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய அவர் 'உண்மை'யைத் தேடி ஏழாண்டுகள் அலைந்தார். பல அறிஞர்களை சந்தித்து விளக்கம் கேட்டும் அவருக்கு பேரறிவு கிட்டவில்லை. இறுதியாக புத்தகயாவிலுள்ள போதிமரத்துக்கடியில் தவம் செய்தபோது சித்தார்த்தருக்கு பேரறிவு (நிர்வாணம்) கிட்டியது. அப்போது அவருக்கு வயது முப்பத்தி ஐந்து. அதன்பிறகு அவர் புத்தர் அல்லது 'ஒளிபெற்றவர்' என்று அழைக்கப்பட்டார். பெனாரசுக்கு அருகிலுள்ள சாரநாத் என்ற இடத்தில் புத்தர் தனது முதலாவது உரையை நிகழ்த்தினார். அடுத்த நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் இடைவிடாத பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டார். குசிநகரம் என்றவிடத்தில் தனது எண்பதாவது வயதில் அவர் உயிர் நீத்தார்.
கௌதம புத்தர் |
புத்தரின் போதனைகள்
புத்தர் போதித்த நான்கு சீரிய உண்மைகளாவன :
- உலகம் துன்பங்கள் நிறைந்தது.
- துன்பங்களுக்கு காரணம் ஆசை.
- ஆசைகளைத் துறந்தால் துன்பங்களைத் துடைக்கலாம்.
- இதற்கு எண்வகை வழிகளைப் பின்பற்றுதல் வேண்டும்.
எண்வகை வழிகளாவன : நன்னம்பிக்கை, நன்முயற்சி, நற்பேச்சு, நன்னடத்தை, நல்வாழ்வு, நன்முயற்சி, நற்சிந்தனை, நல்தியானம்.