உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் .
28
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே.
32
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே .
36
வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,