இந்தக் கனவுகளிலே பலவகை உண்டு. அரைகுறைத் தூக்கத்தில் வரும் கனவு, நினைவின் எதிரொலி.
பகல் தூக்கந்தான் பெரும்பாலும் அரைகுறை தூக்கமாக இருக்கிறது. ஆகவேதான், `பகல் கனவு பலிக்காது’ என்கிறார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவு பெரும்பாலும் பலிக்கிறது. ஆழ்ந்த தூக்கம் என்பது அதிகாலையில் தான் வருகிறது. ஆகவே, `காலைக் கனவு கட்டாயம் பலிக்கும்’ என்கிறார்கள். ஆண்டாள் காண்பதோ காலைக் கனவுமல்ல; பகல் கனவுமல்ல. அது ஆசையின் உச்சம்; பக்திப் பெருக்கு; பரவசத் துடிப்பு. கண்ணனை மணவாளனாகக் காண்கிறாள் கோதை. `உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்று தன்னை அவன் கையில் தருகிறாள் நாச்சியார். கண்ணாடி முன் நிற்கிறாள். பூச்சூடி, குழல் முடித்து, பொட்டிட்டு நின்று, தன் திருமுகத்தைத் தானே பார்க்கிறாள். ஆண்டாளின் ஸ்தூலத்திற்குக் கண்ணாடியில் தெரியும் அவளது உருவமே தோழியாகிறது. “அடி தோழி!
நான் கனவு கண்டேன். வாரண மாயிரம் சூழ வலம்வந்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக்கனாக் கண்டேன் தோழீ நான்.”
- “எல்லே இளங்கிளியே! என் கனவைக் கேட்டாயா?
ஆயிரம் யானைகள் சூழ நாரண நம்பி வந்தான்;
அவன் வரும்போது பூரண கும்பங்கள் எழுந்தன;
தோரணங்கள் நாட்டப்பட்டன. கதிரொளி தீபம் கலசமுட னேந்தி சதிரிள மங்கையைர் தாம்வந் தெதிர்கொள்ள மதுரையார் மன்னர் அடிநிலை தொட்டெங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான். – ஆம்!

- ஆம், ஆண்டாளின் கனவு, அவளது ஆசையின் விரிவு! ஏக்கத்தின் இலக்கியம்!
இத்தகைய கனவுகளைப் பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது. கனவுகள் நினைவுகளுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தால், அவை பலிக்கும் என்கிறது. சிலப்பதிகாரத்தில் `கனாத்திறம் உரைத்த காதை’ வருகிறது. `முத்தொள்ளாயிர’ நாயகிகளும் கனவு காண்கிறார்கள். திருக்குறளிலும் கனவுக் குறிக்கப் பெறுகிறது. கனவு என்பதை இறைவன் விடும் முன்னறிவிப்பு என்றே நான் கருதுகிறேன்.
இந்துக்களுக்கு கனவு நம்பிக்கை அதிகம். எனக்கு மிக அதிகம். காரணம், நான் கண்ட கனவுகள் பெரும்பாலும் பலித்திருக்கின்றன. 1948-ஆம் ஆண்டு நான் சேலத்தில் வேலை பார்த்தபோது அரிசிப்பாளையத்தில் தங்கியிருந்தேன்.
என்னோடு பூந்தோட்டம் திருநாவுக்கரசு என்ற நண்பரும், சாந்தி மா. கணபதி என்ற நண்பரும் தங்கியிருந்தார்கள். அவர்களில் பூந்தோட்டம் திருநாவுக்